நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற விவகாரம் : கோவை வாலிபர்கள் கைது.!!
கோவை : நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களிடம் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. பிரபல மலையாள சினிமா நடிகையான பூர்ணா தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பூர்ணா. கடந்த மாதம் கொச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த 4 பேர் பூர்ணாவை துபாய் தொழிலதிபர் ஒருவர் பெண் பார்க்க வருவதாக பூர்ணாவின் தாயாரிடம் கூறியுள்ளனர். மேலும் 4 பேரும் அவரிடம் பேசிவிட்டு பூர்ணாவின் செல்போன் எண் மற்றும் புகைப் படத்தை வாங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர் பெண்கேட்டு வந்த துபாய் தொழிலதிபர் பேசுகிறேன் என கூறி, அவசரத் தேவைக்காக ரூபாய் ஒரு லட்சம் பணம் தேவை என்றும் மிரட்டும் வகையில் கேட்டுள்ளார். அப்போது முன்னுக்கு பின் முரணாக அந்த நபர் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணா கொச்சி மரடு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை செரீப், ரபீக் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதன்படி இந்த கும்பல் இதுபோல் பலரையும் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாடல் அழகிகள் உள்பட இளம்பெண்களை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர். இளம்பெண்களை படப்பிடிப்புக்கு என அழைத்து சென்று பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறபடுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கோவையைச் சேர்ந்த நசீப் ராஜா (வயது 27), ஜாபர் சாதிக் (வயது 27) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை பாலக்காட்டுக்கு அழைத்துச்சென்று ஓட்டலில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி பணம் வசூலித்த சம்பவத்திலும் இவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இவர்கள் தங்கள் பெயர்களை கண்ணன், ரிஷி என மாற்றி பல பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இரண்டு பேரும் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இத்துடன் நடிகையை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. .
Leave a Reply